

நயினார் நாகேந்திரன்
சென்னை: ‘ஆவின் பால் தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிடுவதோடு, ஆவின் செழிப்பதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் விஜய் எடுக்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த சில தினங்களில் மட்டும், கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமார் 30% வரை குறைவு, சில ஆவின் நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கெடுபிடி, மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 60% பால் தர விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைக்கு பெருமளவில் நம்பியிருக்கும், ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற குளறுபடிகள் தொடருமானால், மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களேயே நாட வேண்டியிருக்கும். இது தமிழக மக்களை நிதிச்சுமைக்குள் தள்ளுவதோடு, அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கும்.
ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு முந்தைய திமுக அரசு போதிய ஊக்கத் தொகையை வழங்காததால், பால் கொள்முதல் வீழ்ச்சியடைந்து, அதிக உற்பத்திச் செலவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும், பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகளிலும் சமரசம் செய்து, நஷ்டத்தை ஈடுசெய்ய முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனியும் மக்களின் ஊட்டச்சத்தில் கைவைக்கும் திட்டம் ஏதும் இருந்தால், அதைக் கைவிட்டு, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்களைப் போல, ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.