

சென்னை: காவல்துறை அதிகாரிகளான சந்தீப் மித்தல், ஆர்.தினகரனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்த உத்தரவு: தமிழக காவல்துறை ஆயுதப்படைப் பிரிவு டிஜிபி-யாக இருந்த சந்தீப் மித்தல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை பிரிவுக்கு தற்போது, வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி இயக்குநராக உள்ள கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநரான டிஜிபி சீமா அகர்வாலுக்கு ‘தீயணைப்பு ஆணையத் தலைவர்’ பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், ‘தீயணைப்பு ஆணையம்’ புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருந்தார். இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற டிஜிபி சுனில் குமார் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இருதினங்களுக்கு முன்னர் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில், அந்த இடங்களுக்கு தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.