

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரிகளான அருண், கண்ணன் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி விசாரணை நடத்தி உள்ளனர்.
பணம், நகை, ஆடம்பர பொருட்களை ஆசைகாட்டி, ஏழ்மையைப் பயன்படுத்தி ஏராளமான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி,கணவர் மகேந்திர சிம்மன், முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் கார் ஓட்டுநர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில், இதுவரை 10 சிறுமிகள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வீரமணி மீது இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வீரமணியை மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் காவல் துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அடுத்தடுத்து திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முயன்றது ஏன்? இந்த வழக்கில் இதற்காக ஏதேனும் அழுத்தம் வந்்ததா? என்பது குறித்தும் 80-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, இருவரிடமும் எழுத்துப்பூர்வமாக பதில்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விசாரணையை தொடர்ந்து மிரட்டல் தரகர்கள் பலர் சிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெம் வீரமணியை மிரட்டி பணம் பறித்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டுள்ளது. இதனால், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.