

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
சென்னை: ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வீரமணி மீதான போக்சோ வழக்கில் விரிவான விசாரணை நடத்தி, குற்றத்துக்கு துணைபோன அனைவரையும் கைது செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில், சென்னை தரமணியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:
ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் வீடியோ தெளிவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்க முயன்றது ஏன்? எதற்காக மேல் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. உரிய விசாரணை மேற்கொள்ளாததற்கு அவர் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். வழக்கில் குற்றங்களை மூடிமறைக்க பல கோடிகள் கைமாறியுள்ளதாக தெரிகிறது.
குற்றவாளிகளை காப்பாற்ற துணைபோனதன் காரணமாகவே அருண், கண்ணன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேனாம்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் ஒருவரும் தப்பித்துவிடக் கூடாது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.