

சென்னை: அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார்கள் வந்தால், 30 நாட்களில் விசாரணையை துவங்கி, 3 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் நகராட்சியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி, துரை சீனிவாசன் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்து மூன்று மாதங்களாகியுள்ளது. இந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
மேலும், அரசு நிலங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தால், அவற்றின் மீது 30 நாட்களுக்குள் விசாரணையை துவங்க வேண்டும். மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து, ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும் வகையில், இந்த உத்தரவு நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.