அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை
Updated on
1 min read

மதுரை: அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் மொத்த வேலை நாள் நியமனம் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் இளமாறன், கீர்த்திகா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 2023-ம் ஆண்டின் முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகளின் முழுநேரப் பணியாளர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தனியார் மருத்துவப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது. மொத்த வேலை நாட்களில் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு கொண்டிருக்க வேண்டும். இதில் மொத்த வேலை நாட்கள் எத்தனை என்பது குறிப்பிடப்படவில்லை. மொத்த வேலை நாட்களை பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களின் விடுமுறைப் பட்டியலை பொறுத்து தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் மார்ச் மாதம் வெளியிட்ட புதிய திருத்தத்தில், 75 சதவீதம் வருகைப் பதிவைக் கணக்கிட மொத்த வேலை நாட்கள் ‘300’ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 300 வேலை நாள் என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவப் பேராசிரியர்களுக்குப் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் தனிப்பட்ட விடுப்பு விதிகளைப் பாதிக்கும். எனவே இந்த விதியை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உத்தரவை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் இன்று விசாரித்தார். பின்னர் நீதிபதி, மருத்துவப் பேராசிரியர்களுக்கான ஆண்டின் மொத்த பணிநாள் 300 என நிர்ணயித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான வேலை நாள் நிர்ணயத்துக்கு இடைக்கால தடை
‘ஐபிஎல் ஒரு பெரிய வர்த்தகம்... நியாயமான போட்டிகளை எதிர்பார்க்க முடியாது!’ - முரளிதரன் ஓபன் டாக்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in