

முத்தையா முரளிதரன்
ஐபிஎல் பெரும் பணக்குவிப்பு கிரிக்கெட் தொடராகி விட்டது, அதே போல் பணக்குவிப்புக்கு ஏதுவானது ரன் குவிப்பு மட்டுமே, இங்கு நியாயமான போட்டிகளை எதிர்பார்க்க முடியாது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
265 ரன்களெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல் ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றிகரமாக விரட்டப்படுகிறது. பவுலர்கள் வெறும் எந்திரங்களாக்கப்பட்டுள்ளனர். பவுலிங் மெஷின் வீசுவது போல்தான் வீசுகின்றனர்.
சில அபூர்வ வேளைகளில் பந்துகள் ஸ்விங் ஆகி எதிரணி 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவதும் நடக்கிறது. ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் பெரிய ஸ்கோர், சிறிய ஸ்கோர் எல்லாவற்றிலும் நியாயமற்ற போட்டிகளே நடைபெறுகின்றன.
“பவுலர்களுக்கு மிக மிகக் கடினம். எங்கள் அணி (சன்ரைசர்ஸ்) என்று இல்லை, எந்த அணியும் பந்து வீச்சை வெளுத்து வாங்கவே செல்கிறார்கள். நாங்கள் ஆடும் போதெல்லாம் முதல் 6 ஓவர்களில் 40-50 ரன்கள் ஒரு விக்கெட் என்று இருந்தாலே நல்ல தொடக்கம் என்று கருதினோம். இப்போதெல்லாம் பவர் ப்ளேயில் 70-80 ரன்கள் குவிக்கப்படுகின்றன.
நல்ல பவுலரே சிக்ஸருக்கு அனுப்பப்படுகிறார். பும்ராவே அடி வாங்குகிறார். அபிஷேக் சர்மா அடிப்பதைப் பார்த்தால் நம்ப முடியவில்லை. புதிய வீரர் சலில் அரோரா, பும்ராவை அலட்சியமாக சிக்ஸ் அடிக்கிறார். நம்ப முடியவில்லை. பும்ராவுக்கு எதிராக அவுட் ஆகாமல் இருப்பது எப்படி என்று சிந்திப்பது போக இப்போதெல்லாம் யாராய் இருந்தால் என்ன சிக்ஸ் அடிக்கத்தான் போவோம் என்கின்றனர். நவீன கிரிக்கெட்டை இப்படித்தான் ஆட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது அதன்படிதான் ஆடுகின்றனர்.
பவுலர்கள் பாடு திண்டாட்டம்தான். கூடியமட்டும் துல்லியமாக வீச முயற்சி செய்யலாம் அவ்வளவே. நன்றாகவே வீசினாலும் அடி வாங்கும் நாளாக அமையும் என்பதுதான் இன்றைய நிலை. ஸ்பின்னர்கள் வேகமாக வீசுகின்றனர். அவர்கள் பந்தை ஸ்பின் செய்வதில்லை.
எங்கள் காலத்தில் நானும் ஷேன் வார்னும் வீசும்போது டி20-யில் இத்தனை அதிரடி ஆட்டங்கள் இல்லை. ஒன்றிரண்டு முறை நான் 60 ரன்கள் வரை கொடுத்திருக்கிறேன். ஆனால், இப்போதெல்லாம் 50 ரன்கள் கொடுக்காமல் இருப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. ஆட்டம் மாறிவிட்டது. அதனால் காலக்கட்டங்களை நாம் ஒப்பிட முடியாது.
எல்லைக்கோடுகளை நீட்டிப்பதன் மூலமும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. நியாயமான பிட்ச்களை போட்டால் பார்வையாளர்கள், ரசிகர்கள் போட்டி சுவாரஸ்யமில்லை என்று கூறுவார்கள். அவர்களுக்கு கேளிக்கைதான் முக்கியம். பவுண்டரிகள், சிக்ஸர்கள் மட்டுமே அவர்களை குஷிப்படுத்துகிறது. இப்போது ஐபிஎல் கிரிக்கெட் பெரிய வர்த்தகமாக உள்ளது. ஸ்பான்சர்கள் மற்றும் அனைத்தும் உள்ளன. எனவே நியாயமான போட்டியே தேவை என்று மாறினால் ஸ்பான்சர்கள் போய்விடுவார்கள், மாற்றினால் ரசிகர்களின் ஆர்வமும் போய்விடும்.
இதே நிலைதான் தொடரும். ஆனால் போகப்போக பவுலர்கள் தகவமைத்துக் கொண்டு அவர்களுக்கான திட்டங்களுடன் தயாராக வருவார்கள். பேட்டர்கள் அதற்கு ஒரு மாற்றைக் கொண்டு வருவார்கள், எனவே இந்த கிரிக்கெட் இப்படித்தான் இனி போகும்.” இவ்வாறு கூறினார் முரளிதரன்.