

சென்னை: தீபாவளியை முன்னிட்டு பாமாயில் கொள்முதலில் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கு மட்டும் அதிக ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு தலா ஒரு லிட்டர் வீதம் சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதற்காக, பாமாயில் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஜூன் 5-ல் வெளியிட்டது.
இந்த டெண்டரில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் தகுதியின் அடிப்படையில் 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த நிறுவனங்களிடமிருந்து முதற்கட்டமாக 200 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளை அக்.29-க்குள் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட 4 நிறுவனங்களில் ஒன்றான சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கேடிவி ஹெல்த் ஃபுட் என்ற நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக அரசின் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் 600 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் எங்களது நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில் குறைந்த விலையின் அடிப்படையில் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.148 வீதம் எங்களது நிறுவனம் சார்பில் 360 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்தோம்.
அதேபோல் எம்ஜிஎம் என்ற நிறுவனம் 150 லட்சம் லிட்டர் பாக்கெட்டுகளை சப்ளை செய்ய முன்வந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக எம்ஜிஎம் நிறுவனத்திடமிருந்து 80 லட்சம் லிட்டர் பாக்கெட்டுகளையும், குமார் அக்ரோ என்ற நிறுவனத்திடமிருந்து 52 லட்சம் லிட்டர் பாக்கெட்டுகளையும், இன்டகிரேட்டடு என்ற நிறுவனத்திடமிருந்து 34 லட்சம் லிட்டர் பாக்கெட்டுகளையும், எங்களது நிறுவனத்திடமிருந்து 34 லட்சம் லிட்டர் பாக்கெட்டுகளையும் கொள்முதல் செய்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவை நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்து இருப்பது பாரபட்சமானது.
எந்த அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதற்கான தெளிவான அளவுகோல் இல்லை என்பதால் எம்ஜிஎம் நிறுவனத்திடமிருந்து 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்காக கடந்த செப்.29 -ல் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்.
அத்துடன் 4 நிறுவனங்களும் சப்ளை செய்ய முன்வந்த பாமாயில் பாக்கெட் அளவுகளின்படி விகிதாச்சாரத்தின்படி கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடந்தது.
அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். சரவணக்குமார், ‘‘நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த கொள்முதல் உத்தரவை முறையாகப் பிறப்பிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டும் அதிகப்படியானபாக்கெட்டுகளை கொள்முதல் செய்வது ஏற்புடையதல்ல’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக செப்.29 அன்று பிறப்பித்த உத்தரவுக்கு நவ.2 வரை இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.