

சென்னை: ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்ட இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு மட்டும், அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜன.4-ம் தேதி, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (‘டேப்ஸ்’) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டபோதும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை.
‘டேப்ஸ்’ ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள் மற்றும் கணக்கீட்டு நடைமுறைகள் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டத்தின் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கும் பணிக்கு காலஅவகாசம் தேவைப்படும். எனவே, 1.1.2026-க்குப் பிறகு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால வாழ்வாதார ஆதரவுத்தொகை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஓய்வுபெற்ற ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணத் தொகையாக நிர்ணயிக்கப்படும். அதோடு சேர்த்து நடைமுறையில் இருக்கும் அதவிலைப்படியும் வழங்கப்படும். இந்த இடைக்கால நிவாரணத் திட்டம் 1.4.2003 அன்று அல்லது அதற்குப்பிறகு ரெகுலர் ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் இருந்தவர்கள்.
1.1.2026 அன்று பணியில் நீடித்து, அதற்குப்பிறகு வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த பணிக்காலத்தை நிறைவு செய்தவர்கள், பணியின்போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டும் பொருந்தும். அதேநேரம் 1.1.2026-க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், பணியில் இருந்து விலகியவர்களுக்கும் பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கருத்து: இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் கூறும்போது, “இடைக்கால நிவாரணத்தொகை வழங்கும் தற்காலிக ஏற்பாடு வரவேற்கத்தக்கது. ஆனால், அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெறும் கம்யூட்டேசன் தொகை குறித்தோ, பணிக்கொடை பற்றியோ அரசாணையில் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி தவெக அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் கூறும்போது, “டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்துக்கான முழு விதிமுறைகளையும் அரசு விரைந்து வெளியிட வேண்டும். தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.