

வேளாண் துறைக்கு ரூ.47,248.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, திருவண்ணாமலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, நீலகிரி கோத்தகிரியில் ஜான் சல்லிவன் பூங்கா ஆகிய 3 பூங்காக்கள் ரூ.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் 83.64 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.69,457 கோடி பயிர்கடனும், 16 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ரூ. 8,938 கோி கால்நடை, மீன்வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த கடனும் வழங்கப்பட்டுள்ளன. 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன நெல் சேமிப்புத்தளங்கள் ரூ.331 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. மேலும், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 130 சேமிப்புத்தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் 23 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பசுந்தீவன சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 10 ஆயிரம் புல்லறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வருமானத்தை ஈட்டும் வகையில் ஆதரவற்ற பெண்கள், விதவைகள் 38,800 பேருக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.75.63 கோடி செலவில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.30 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளை பெருக்கி கால்நடை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க முடியும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ரூ.7.76 கோடி நுண்கடன்: 2025-2026-ம் நிதி ஆண்டில் ரூ.34 கோடி மதிப்பில் 1,739 மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அலைகள் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 15,525 பேருக்கு ரூ.7.76 கோடி நுண்கடன் அளிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள சிறு-குறு ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகள், பெண்களைக் தலைவியாகக் கொண்ட ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15,236 கோடி செலவில் 5,649 விவசாய கிணறுகள், 33,853 பண்ணைக்குட்டைகள் 2.66 லட்சம் மண்வரப்புகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.3.24 கோடி செலவில் மரக்கன்றுகள் உற்பத்திசெய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வேளாண் காடுகள் கீழ் 2.24 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்டுவரப்பட்டுள்ளது.
ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல்.. அடிப்படை ஆண்டான 2011-2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024-2025-ல் வேளாண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021-22-ம் ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.34,220 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2025-26-ம் நிதி ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேளாண் துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை அறியலாம். 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.47,248.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவர் நலனுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.