

சென்னை: கோடை முடிந்தும் வெயில் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 3 நாட்கள் மட்டுமே இடைவெளிவிட்டு ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கை பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதங்களில் வெயில் குறைந்து தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும். ஆனால், இந்தாண்டு வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடும் வெப்பத்தால் சோர்வடைகின்றனர். குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு பள்ளிகளில் வகுப்பறைகளில் போதிய காற்றோட்டம் இல்லாத நிலையிலும், மின்வெட்டு ஏற்படும் சமயங்களிலும் குழந்தைகள் வியர்வையில் நனைகின்றனர்.
அதிக வெப்பம், போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் குழந்தைகளுக்கு நீரிழப்பு, மயக்கம் மற்றும் சருமப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வெப்ப அலை காரணமாக மிகுந்த சோர்வுடன் மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்புவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சில ஆண்டுகளாகவே கோடை முடிந்த பிறகும் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் 2023 முதல் 2025-ம் ஆண்டு வரை ஜூன் 10 முதல் 14-ம் தேதி வரையே பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு 3 நாட்கள் மட்டுமே தள்ளிவைக்கப்பட்டது.
பெரியவர்களுக்கே இந்த வெயில் சவாலாக உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பில் கல்வித்துறை ஏன் இவ்வளவு அவசரம் காட்டியது எனத் தெரியவில்லை. எனவே, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டுமாவது வெயில் குறையும் வரை விடுமுறை தரவேண்டும்” என்றனர். இதற்கிடையே தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் முதலே பல்வேறு மாவட்டங்களில் வெயில் தகித்து வருகிறது. தினமும் ஏதேனும் ஒரு நகரத்தில் 104 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகிறது. வேலூர், சென்னை, திருச்சி, கடலூர் உள்பட வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சிவானந்த பை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: நகரங்களில் அதிகரித்துவரும் கான்கிரீட் கட்டிடங்களால், வெப்பத்தை உள்வாங்கும் பசுமைப் பரப்புகள் குறைந்துவிட்டன. மேலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், வெப்பத்தால் அந்த ஈரப்பதம் சூடாகி, சுற்றுப்புற வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக உணரப்படுகிறது. இதை ‘வெட் பல்ப்’ வெப்பநிலை என்கிறோம். அதாவது. ஒரு நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி எனில், காற்றில் உள்ள ஈரப்பதத்தால் அது மேலும் அதிகமாக இருப்பது போன்று உணர முடியும்.
இதுதவிர தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் கடலில் இருந்து நிலப்பரப்பை நோக்கி வீசும் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை கடல் காற்று வீசுவது குறைந்தது. தமிழக நிலப்பரப்பில் இருந்து மேற்கு திசை காற்று வங்கக்கடலை நோக்கி வீசத் தொடங்கியது. இதனால் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.