

சென்னை: தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவதால், இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகளை போதிய கொள்முதல் செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகள், ரத்த நாளங்கள் வழியே செலுத்தப்படும் திரவ மருந்துகளும் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாத பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மருத்துவ வழிகாட்டுதல்களின்படி துரித சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வெப்ப அலை பாதிப்புகள் தொடர்பான தரவுகளையும், விவரங்களையும் சேகரித்து, அதன் அடிப்படையில் சுகாதார குழுவினர் செயல்பட வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகளை சேமிப்பதற்கான குளிர்பதன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் ஓஆர்எஸ் எனப்படும் உப்பு, சர்க்கரை கரைசல் விநியோக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.