

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக ஸ்வீட் பாக்ஸ் கேட்டு முகவரியை பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ‘கேஷ் ஆன் டெலிவரி’யில் குவிந்ததால், நிம்மதியிழந்து வீட்டை காலி செய்து ஓடிய விசித்திர சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் வீரமணி. நகைச்சுவையான மதுரை வட்டார வழக்கு பேச்சு மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமடைந்த இவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, தனது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீரமணி, “எனக்கு ஸ்வீட் பாக்ஸ் அனுப்ப விரும்புபவர்கள் தாராளமாக இந்த முகவரிக்கு அனுப்பலாம்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த சில குறும்புக்கார நெட்டிசன்கள், அவருக்கு இனிப்பு அனுப்புவதற்குப் பதிலாக அவரது முகவரியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பல விலையுயர்ந்த பொருட்களை ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்யத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் பால் பாக்கெட் போன்ற சிறிய பொருட்களுடன் தொடங்கிய இந்த ஆன்லைன் விளையாட்டு, அடுத்தடுத்த நாட்களில் விஸ்வரூபமெடுத்தது. ரூ.1.74 லட்சம் மதிப்பிலான செல்போன், 100 இன்ச் எல்இடி டிவி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி என அடுத்தடுத்து கனரக வீட்டு உபயோகப் பொருட்கள் வரிசையாக அவரது வீட்டின் முன் வந்து டெம்போவில் இறங்கின. முதலில் நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட வீரமணி, பின்னர் இதன் விபரீதத்தை புரிய தொடங்கினார். தினந்தோறும் காலை முதல் இரவு வரை டெலிவரிகள் குவிந்த வண்ணம் இருந்தன.
வந்த டெலிவரி ஊழியர்களிடம், “நான் இந்த பொருட்களை ஆர்டரே செய்யவில்லை, யாரோ விளையாட்டாக செய்திருக்கிறார்கள்” எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்புவதற்குள் வீரமணி மூச்சுத் திணறிப் போனார். பல கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய டெலிவரி ஊழியர்களின் கடுமையான வசவுக்கும் அவர் ஆளாக நேரிட்டது. இந்த விவகாரத்தின் உச்சக்கட்டமாக, இருசக்கர வாகனம், ஆம்புலன்ஸ், ரூ.35 லட்சத்தில் ஜே.சி.பி, போன்றவையும் வீரமணியின் முகவரிக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’யில் ஆர்டர் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி ரூ.70 கோடி மதிப்புள்ள ராணுவ பீரங்கியையும் ஆர்டர் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளனர்.
நிலைமை விபரீதமானதை உணர்ந்த காவல்துறையினர், வீரமணியை தொடர்புகொண்டு போலி ஆர்டர்கள் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். இதனால் கடும் அச்சமடைந்த அவர், “இனிமேல் நான் யாரிடமும் எதுவும் கேட்கமாட்டேன், தயவுசெய்து போலி ஆர்டர்களை நிறுத்துங்கள்” என சமூக வலைதளத்தில் ஆதங்கப்பட்டு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் நெட்டிசன்களின் சேட்டை குறையாமல், தொடர்ந்து பார்சல்கள் குவிந்துகொண்டே இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, வேறு வழியின்றி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியேறியுள்ளார்.
திபாவளி பண்டிக்கைக்கு இலவசமாக ஸ்வீட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டு பொதுவெளியில் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்ததால் இன்ஸ்டா பிரபலத்துக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இணையவாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பொதுவெளியில் வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பகிர்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.