வருமானத்தை மறைத்ததாக வழக்கு: ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிரான விசாரணை தொடக்கம்

சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தகவல்
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி

Updated on
1 min read

சென்னை: வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நெல்லை வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி கடந்த 2019 மற்றும் 2024 என 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், வருமானத்தை மறைத்துள்ளதாகவும் வருமான வரித் துறைக்கு ஆதாரப்பூர்வமாக புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில், மனைவி, மகனுக்கு ரூ.19.71 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.40.62 கோடி அளவுக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.23.58 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இது அவரது வருமானத்தைவிட 288 சதவீதம் அதிகம். எனவே, இதுதொடர்பாக வருமானவரித் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல். சுந்தரேசன், ‘‘வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த வழக்கில் நவாஸ்கனி எம்.பி. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதேபோல, வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக நவாஸ்கனி சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த மற்றொரு வழக்கு மீதான விசாரணையும் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி</p></div>
ரூ.42 கோடிக்கு ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in