

தென்காசி: நாட்டிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சல் தடுப்பூசி கடையநல்லூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி களப்பயன்பாடு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஜப்பானில் உள்ள டக்கேடாஎன்ற தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த தடுப்பூசியை இரண்டு தவணைகளாக 3 மாத இடைவெளியில் எடுத்துக் கொண்டால், டெங்கு காய்ச்சலில் இருந்து 80 முதல் 90 சதவீதம் பாதுகாப்பாக இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இங்கிலாந்து, இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்துள்ளன.
இந்தியாவில் ஜூலை மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடுப்பூசிக்கு அனுமதிவழங்கியுள்ளது. ஆனால், இதுவரை எந்த மாநிலமும் இந்த தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை. நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்
படுத்தியுள்ளோம்.
கடையநல்லூர் பகுதியில் கடந்த ஆண்டுகளில் டெங்குவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அதனால், கடையநல்லூர் பகுதியில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஹேமந்த், சந்தோஷ் ஆகியோர் இந்த தடுப்பூசியின் களப்பயன்பாடு குறித்து ஆய்வு நடத்துவார்கள். டெங்கு நோயால் இனி உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கடையநல்லூரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 20 அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.