

திருச்சி: “இந்திய நாட்டின் கடன் சுமை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதை, தரவுகள் அடிப்படையில் அயலக நிதி அமைப்புகள் மற்ற நாடுகளை ஒப்பிட்டு தகவல் வெளியிட்டு வருகிறது” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்கு நிகராக எப்போது சமநிலை அடையும் என்பது அரசு நிர்ணயம் செய்யும் விஷயம் அல்ல. அது தன் சமநிலையை இயற்கையாகவே அடையும். அதாவது இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்பது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே அடியாக குறையவோ, அதிகரிக்கவும் விடாமல் பார்த்துக்கொள்வது. அதேவேளையில் ரிசர்வ் வங்கியும் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்ற வரம்பை நிர்ணயிப்பது கிடையாது.
சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக நாடு முழுவதும் எழுந்த புகாரை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கலாம். அது ஒரு வழிமுறை. அல்லது போராட்டம் வாயிலாக நியாயம் கேட்கலாம். இது இரண்டாவது வழிமுறை. எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக இரண்டாவது வழிமுறையை தற்போது கையாண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டும். அதாவது, எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும். அதன் வாயிலாக மாநில மக்களுக்கு நிதிநிலை குறித்த தெளிவு கிடைக்க பெறும். மத்திய அமைச்சராக நான் ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவது உகந்ததாக அமையாது.
நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு முதல் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வேளாண் சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்துவதில் ஏற்படும் தட்டுப்பாடுகளை தவிர்க்க விநியோக மேலாண்மையை அந்த குழு கையாண்டு வருகிறது. தற்போது வரை அந்த குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் வாயிலாகவே ஏற்றுமதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச உதவி தொகை போன்றவை சரியாக வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டின் கடன் சுமையை குறைக்க கரோனா தேசிய பேரிடருக்கு முந்தைய காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இதற்கு நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
வருவாய் முதலீடு மற்றும் வருவாய் பற்றாக்குறை ஆகியவை குறித்த தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2030-ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மட்டுமே கடனாக இருக்கும் என நமது அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் கடனை குறைக்க தேவையான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை வெளிநாடுகளை ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். இதையே தான் பல அயலக நாட்டு அமைப்புகள் இந்திய தேசத்தின் கடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது என தரவுகள் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர்.
தனிநபர் வருவாயை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அதை உயர்த்தவும் மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது கரோனா தேசிய பேரிடர் காலத்தை தொடர்ந்து வந்த இடர்பாடுகளை சமாளித்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போதும் மேற்காசிய நாடுகள் போர் காரணமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை எதிரொலியாக, நமது நாட்டில் ஏற்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.