

சென்னை: ஈரப்பத வெப்ப அலையால் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் (University of Reading) உள்ள அறிவியலாளர்கள், இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, இந்தியாவின் பருவமழை காலத்தில் வரும் “ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் முடிவுகள் தொடர்பாக, கிளைமேட் டைனமிக்ஸ் (Climate Dynamics) என்ற ஆய்விதழில், கோடை, பருவமழை காலத்தில் இந்தியாவில் ஏற்படும் ஈரப்பதமான வெப்பஅலைகளின் அமைப்பு (Anatomy of moist heatwaves in India during the summer monsoon season) என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்று அண்மையில் வெளியானது.
அதில் கூறியிருப்பதாவது: மனித உடல் வியர்வையை வெளியேற்றி ஆவியாதல் மூலம் தன்னைக் குளிர்விக்கிறது. இது வறண்ட வெப்ப காலத்தில் இயல்பாக நடைபெறுகிறது. ஆனால் பருவமழை காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியில் உள்ளதுபோல், காற்று ஏற்கெனவே ஈரப்பதத்தால் நிறைந்திருக்கும்போது, அந்த ஆவியாதல் மெதுவாக நடக்கிறது அல்லது முழுவதுமாக நடைபெறாது.
இதன் காரணமாக உடல் குளிர்வித்தல் நடைபெறாமல் உடல் வெப்பநிலை உயர்கிறது. வெப்பச் சோர்வும், வாதமும் விரைவாக ஏற்படுகிறது; இது நீடிக்கும் பட்சத்தில் சில மணி நேரங்களில் மரணம் ஏற்படுகிறது. அன்றைய நாளில் பதிவான வெப்பநிலை இயல்பானதாகத் தெரியலாம். ஆனால் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவுகையில் நாம் உணரக்கூடிய வெப்ப நிலை அதிகமாகிறது.
சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியின்போது ஏற்பட்ட 5 பேர் மரணம் மற்றும் பலர் மயக்கமடைந்ததற்கு காற்றில் இருந்த அதிக ஈரப்பதம் தான் காரணம். அன்று, 32 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவியது.
காற்றில் இருந்த ஈரப்பதம் காரணமாக அது 42 டிகிரி செல்சியஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்தியது. ஈரப்பத வெப்ப அலையால் இந்தியாவில், விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புறங்களில் கட்டுமான தொழிலாளர்கள், கான்கிரீட் வீடுகளில் வசிக்கும் முதியோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆய்வானது, வெப்பம் மற்றும் ஈரப்பதம் அடிப்படையிலான வெப்ப அளவீட்டை (wet-bulb temperature) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவெனில், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தை ஏற்படுத்துவதில் மட்டுமின்றி, இந்தியாவில் அது எங்கே மிகவும் ஆபத்தாக இருக்கும் மற்றும் எப்போது தாக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் பருவமழையின் பங்கு உள்ளது என்பதுதான். இதை 4 வாரங்களுக்கு முன்பே கண்டுபிடித்து உரிய எச்சரிக்கையை வழங்க முடியும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.