

சென்னை: வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் தடையின்றி விநியோகிக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
வணிக சிலிண்டர் பாதிப்பு இருக்கும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, சிலிண்டரை அத்தியாவசிய பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. காஸ் சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோகம் பாதுகாப்பாகவும், தடையின்றியும் தொடர்கிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு எல்பிஜி காஸ் சிலிண்டர்கள் சீராகக் கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.
முன்கூட்டிய அல்லது பதற்றமான முன்பதிவுகள் தற்காலிகமாகத் தேவையை அதிகரித்து, விநியோக கால அட்டவணையைப் பாதிக்கக் கூடும்.
ஒரு சிறிய நடவடிக்கை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, தேவைப்படும் போது மட்டுமே முன்பதிவு செய்யுங்கள்.
அத்தியாவசியமற்ற முன்பதிவுகளை தவிர்க்க வேண்டும். எங்கள் பணியாளர்களும், விநியோகஸ்தர்களும் இந்தியா முழுவதும் வீடுகளுக்கு சிலிண்டர்கள் சென்றடைவதை உறுதி செய்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.