இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்: துப்பாக்கிச் சுடுதலில் நீரு தண்டா, தொடர் ஓட்டத்தில் கோவை வித்யா அசத்தல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அபாரம்
 மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜை உள்ளடக்கிய இந்திய அணி.

மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜை உள்ளடக்கிய இந்திய அணி.

Updated on: 
2 min read

நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் டிராப் பிரிவில் இந்திய வீராங்கனையான நீரு தண்டாவும் மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜை உள்ளடக்கிய இந்திய அணியினரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான தனி நபர் டிராப் பிரிவில், இந்தியாவின் நீருதண்டா 30 இலக்குகளில் 28 இலக்குகளைத் தாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் மகளிர் டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும், 48 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் நீரு தண்டா.

அதேவேளையில் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தனி நபர் பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கமாகவும் இது அமைந்தது. மேலும், டிராப் இறுதிப் போட்டியில் 28 இலக்குகளைத் தாக்கிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் நீரு தண்டா நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் 24 இலக்குகள் தாக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 26 வயதான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரு தண்டா. இவர், இந்திய ராணுவத்தில் நயிப் சுபேதாராகப் பணியாற்றி வருகிறார்.

சீனாவின் சன் யுனோங் 26 இலக்குகளைத் தாக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், குவைத்தின் அப்துல் மாலிக் ஹஜர் 21 இலக்குகளைத் தாக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அணிகள் பிரிவில் வெள்ளி: துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான தனி நபர் டிராப் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக மகளிர் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரு தண்டாவை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் நீரு தண்டா, ஆஷிமா அக்லாவத், மனிஷா கீர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 328 புள்ளிகளைக் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

நீரு தண்டா 118 புள்ளி, ஆஷிமா அக்லாவத் 106 புள்ளி, மனிஷா கீர் 104 புள்ளிகளை சேர்த்தனர். சீனா 346 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், குவைத் 325 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றன.

வித்யா ராம்ராஜ் ஹாட்ரிக்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கிரண் பஹல், பூவம்மா மச்செட்டிரா, பிராச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:29.69 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிராக் அண்ட் ஃபீல்டில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கமாக இது அமைந்தது. பக்ரைன் (3:30.21) வெள்ளிப்பதக்கமும், சீனா (3:31.02) வெண்கலப் பதக்கமும் வென்றன.

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராம்ராஜுக்கு இது 3-வது பதக்கமாக அமைந்தது. தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த அவர், 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

<div class="paragraphs"><p>ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரு தண்டா.</p></div>

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரு தண்டா.

முதல்வர் விஜய் பரிசு அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப் பட்டுள்ளதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று, பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தடகள வீரர்களுக்கு ரூ.30 லட்சம்: முதல்வர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘தடகளம் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கும் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜை உள்ளடக்கிய இந்திய அணி.</p></div>
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்: சண்முகம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in