

சென்னை: விவசாயிகளுக்காகவே தனி உர மானிய நிதி வழங்கி வருவதை கள்ளத்தனமாக கொள்ளையடிக்கும் மோசடி கும்பலை கண்காணிக்க தவறிய வேளாண் துறை அலுவலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளுக்காக அரசு மானிய விலையில் விற்பனைக்கு அனுப்பும் யூரியா உர மூட்டைகளை பெரும் எண்ணிக்கையில் வாங்கி, இதை உருக்கி திரவ வடிவில், அதாவது, ட்ரூபாண்ட் பசையாக மாற்றி மரப்பலகைகளை ஓட்டும் தேவைக்காக இந்த தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே திருமலையாம் பாளையம் தமனாம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகள் இடையே இதற்கான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 40 டன் சுமை ஏற்றும் பெரிய டேங்கர் லாரிகள் இந்த தொழிற்சாலைக்கு பொது சாலைகளில் சென்று வந்துள்ளன. இதனால் சாலைகள் சேதம் அடைந்த நிலையில் பொதுமக்கள் சாலை பாதுகாப்புக்காக எதிர்த்து போராடியுள்ளனர்.
இதற்காக விவசாயிகளும், பொதுமக்களும் இந்த லாரிகளை மடக்கி பிடித்த பொழுது இந்த உண்மை தெரியவந்துள்ளது. உள்ளே சென்று அந்த ஆலையை பார்த்த பொழுது ஆயிரத்திற்கும் அதிகமான யூரியா மூட்டைகள், அடுப்பெரிக்கும் விறகுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்திருக்கிறது. யூரியா மூட்டைகளை பிரித்து கொட்டப்படும் பாய்லர்கள் மற்றும் கன்வேயர் பெல்ட் அமைப்பும் இருந்தது கண்டு காணச் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வட மாநில தொழிலாளர்களை மட்டுமே வைத்து இந்த பணிகள் நடந்து வந்துள்ளதால், வெளியில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது. யூரியா மூட்டைகளை பிரித்து கன்வேயர் பெல்ட்கள் மூலம் பாய்லரில் கொட்டிய பின், விறகுகள் எரியும் கடும் வெப்பத்தில் பாய்லரில் உள்ள யூரியா உருகி திரவ நிலையில் மாறிய பின், டேங்கர்களில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்புவதாக இவர்கள் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கு சென்றவர்களின் போராட்டத்தால், அவ்விடத்திற்கு வந்த சுங்கச்சாவடி போலீசார், வருவாய் துறை, வேளாண் துறையினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யூரியா உர மூட்டைகளை கைப்பற்றி உள்ளனர். மேலும் இது மானிய விலையில் பெறப்பட்ட யூரியா தான் என உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் மதுக்கரை அருகே பிச்சனூரிலும் இது போன்ற ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருவதை விவசாயிகள் கண்டறிந்துள்ளனர்.
திரவ யூரியாவை ஏற்றுவதற்கு இருந்த டேங்கரையும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளையும் கண்டுபிடித்துள்ளனர். பெரும் பகுதி விவசாயிகள் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்துவது யூரியாவே அதிகமாகும். இதனால் தான் யூரியாவிற்கான விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருந்தாலும், இதன் கூடுதல் தொகையை ஈடு செய்திட, மத்திய அரசு மானியம் வழங்கி விலை உயராமல் சீரான விலையில் அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இதற்கு முன்னேயே இந்த உரங்களை வேறு கனரக தொழில்களுக்கு பயன்படுத்துவதை கண்டறியப்பட்டுள்ளது. அப்படியான நிலைகளில் தான் உரத்திற்குரிய மானியங்களை நேரடியாக மத்திய அரசு உர ஆலைகளுக்கு அனுப்புகிறது. விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானிய உரங்களை விற்பனை செய்திட வேண்டும் என அரசு உறுதிபட அறிவித்து. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கண்காணித்து வருகிறது.
வேளாண் துறையில் இதன் கண்காணிப்பிற்கும், நடவடிக்கைக்கும் உரிய தனி அலுவலர்கள் உண்டு. இந்த நிலையில் இவர்கள் அறியாமல் ஆயிரக்கணக்கான மானிய உர மூட்டைகளை எப்படி இந்த ஆலை முதலாளிகளால் பெற முடிந்தது. தொழிற்சாலை சட்டப்படி அனுமதிகூட பெறாமல். அல்லது போலி அனுமதி பெற்று எப்படி செயல்பட்டது. கம்பெனி சட்டப்படி கூட கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எங்கே போனார்கள்?
விவசாயிகளுக்காகவே தனி உர மானிய நிதி வழங்கி வருவதை கள்ளத்தனமாக கொள்ளையடிக்கும் மோசடி கும்பலை கண்காணிக்க தவறிய வேளாண் துறை அலுவலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த ஆலைகளை கள்ளத்தனமாக நடத்தியவர்கள் மீதும், யூரியா உரங்களை சப்ளை செய்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறைப்படுத்தி தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் இப்படியான தொழில்களை கண்டறிய தமிழ்நாடு முழுதும் தொடர் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.