மு.க.ஸ்டாலினுடன் இண்டியா கூட்டணியின் 21 தலைவர்கள் சந்திப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க கோரிக்கை
மு.க.ஸ்டாலினுடன் இண்டியா கூட்டணியின் 21 தலைவர்கள் சந்திப்பு
Updated on: 
2 min read

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை, இண்டியா கூட்டணியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அரசு நாளை மக்களவையில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். தற்போது திமுகவுக்கு 22 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவு முக்கிய துருப்புச் சீட்டாக மாறியுள்ளது.

இதனையடுத்து, இண்டியா கூட்டணி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி.சதீசன் உள்ளிட்ட 21 தலைவர்கள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் போது தனது இல்லத்துக்கு வந்த இண்டியா கூட்டணி தலைவர்களை வாசலில் வந்து மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் வரவேற்றனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி அன்பினை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இண்டியா கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.

இண்டியா கூட்டணி தலைவர்களை சந்திக்கும் முன்னர் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், மு.க.ஸ்டாலின் திமுக எம்.பிக்கள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான எங்களது நிலைப்பாடு தொடர்பாக திமுக எம்பிக்களுடன் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இண்டியா கூட்டணி தலைவர்கள் எங்கள் தலைவரைச் சந்திக்க உள்ளனர். அது குறித்து சந்திப்புக்குப் பிறகுதான் தெரியும்.” என கூறினார்.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நாடாளுமன்றம் சிறப்பு அமர்வு கூடுகிறது. மக்களவை நாளையும் (திங்கள்கிழமை), மாநிலங்களவை டிசம்பர் 2 புதன்கிழமை அன்றும் கூடுகிறது.

மு.க.ஸ்டாலினுடன் இண்டியா கூட்டணியின் 21 தலைவர்கள் சந்திப்பு
"எட்டப்பர்கள் அல்ல, கட்டபொம்மன்கள்" - ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதில்

X