

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணியில் திமுக 6 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. நீண்டகாலமாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து வந்த காங்கிரஸ் இரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டது. திமுக பிரதான எதிர்க்கட்சியானது. திமுகவே எதிர்த்தரப்பில் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
அன்று முதல் திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அதன்பின் வந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்க, தாங்களே காரணம் என திமுக தெரிவித்தது.
இந்த நிலையில் தேர்தல் நெருங்க, நெருங்க, காங்கிரஸ் - திமுக இடையே, ‘கூட்டணிக்கு யார் தலைமையேற்பது?’ என்பதில் போட்டா போட்டிநிலவியது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீண்ட இழுபறியாக சென்றது. வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னரும் பேச்சு தொடர்ந்தது.
கடைசியாக காங்கிரஸ் 16 தொகுதிகளை எடுத்து கொண்டு, மீதி 14 தொகுதிகளை திமுகவுக்கு கொடுத்து அதில் இரு தொகுதிகளை கூட்டணிக்கு வழங்கியது. அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்ட தொகுதியை திமுக தரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது.
இந்த சூழலில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் வாபஸ் பெற மறுத்து விட்டார்.
இந்த புதுவிதமான குழப்பத்தை காங்கிரஸார் ‘நட்பு போட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டோலி ஷர்மா, “ஒரே கூட்டணியில் ஒரு தொகுதிக்குள்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டாலும், நட்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுவது சில நேரங்களில் நடந்து விடும்.
இது ‘நட்பு போட்டி” என்று ஒரு விசித்திர விளக்கத்தை அளித்தார். பிஹாரிலும் சில தேர்தல்களில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு, கூட்டணிக்குள் ‘நட்பு போட்டி’ ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸார் முட்டு கொடுக்கின்றனர். காங்கிரஸ் தொடங்கி வைத்த குழப்பத்தால், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி என்பதே இல்லாமல் போய் விட்டது. தற்போது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 22, திமுக 13, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 1, விசிக 4 என 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்திலும் நட்பு போட்டியா..? - காங்கிரஸின் இந்த ‘நட்பு போட்டி’ ‘ஃபார்முலா’வால் திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கடும் கோபத்தில் உள்ளன.
புதுச்சேரியில் உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சிக்கல் தமிழக கட்சித் தலைமைகளுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் இது கசப்பை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
“இண்டியா கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்கிறார் புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம்.