

திருப்பூர்: இந்திய ஜவுளி உற்பத்தியை வரும் 2031-ம் ஆண்டுக்குள் 350 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடல் நிகழச்சியில் பங்கேற்ற அவர், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், ஏற்றுமதி வளர்ச்சி, உற்பத்தித் திறன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஜவுளித் துறையின் தற்போதைய நிலை குறித்து தொழில் துறையினர் அவரிடம் விளக்கமளித்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: இந்திய ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை வரும் 2030-31-ம் நிதியாண்டுக்குள் 350 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஜவுளி மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்தியாவின் ஜவுளித் தொழிலில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதே வேளையில், வரும் 2030-31-ம் நிதியாண்டுக்குள் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்காகும். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், பட்டு வளர்ப்பு, ஜவுளி மற்றும் பருத்தித் துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பருத்தி இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கமாக அமையும்.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் இருந்தாலும், புதிய நவீன இயந்திரங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அவற்றை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்காவின் அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.