

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு மருந்தகப் பொறுப்பாளராக வளசரவாக்கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) என்பவர் பணியாற்றி வந்தார். ரஞ்சித்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், ரஞ்சித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை ரஞ்சித்குமார் சேகரித்து, அவருடன் தான் நெருக்கமாக இருப்பது போல மார்பிங் செய்துள்ளார்.
பிறகு அந்தப் புகைப்படங்களை அப்பெண்ணிடம் காட்டி, தன்னுடன் வரவில்லை என்றால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ரஞ்சித்குமாரின் தொந்தரவு காரணமாக அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார். ஆனாலும், ரஞ்சித்குமார் அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
போலீஸார் விசாரணை
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.