

தேனி: தேனி மாவட்டம் போடி திமுக நகராட்சித் தலைவர் ராஜ ராஜேஸ்வரியின் கணவர் சங்கர். திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி 29-வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார்.
இவர், வெளிமாநிலங்களுக்கு உரிய ஆவணங்களின்றி ஏலக்காய் அனுப்பியதன் மூலம், பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி முதல் போடியில் உள்ள சங்கரின் ஏலக்காய் கிடங்கு, அலுவலகங்களில் வணிக வரி, வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், 10 பேரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் விசாரணை முடிவடைந்த நிலையில், வருமான வரித் துறையினர் நேற்று சில ஆவணங்களை மட்டும் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “3 பங்குதாரர்களுடன் ஏலக்காய் நிறுவனத்தை நடத்தினேன்.
இதில் ‘அட்வான்ஸ் டாக்ஸ்’ கட்டுவது வழக்கம். கடந்த ஓராண்டாக ஏலக்காய் பரிவர்த்தனை நடக்கவில்லை. வரி செலுத்தாததால், சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது" என்றார்.