

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக தொல்லியல் துறையினர்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் தொடர்பாக தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றவில்லை. தொடர்ந்து, மனுதாரர் ராம.ரவிக்குமார் மற்றும் 10 பேர் அடங்கிய குழுவினர் மலைக்குச் சென்று தீபம் ஏற்றவும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தபோதிலும், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அதை தள்ளுபடி செய்தது. உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதேநேரம், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு விரைவி்ல் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே, மலை உச்சியில் உள்ள தூண், கார்த்திகை தீபத் தூண்தான் என்று ஒரு தரப்பினரும், இல்லை அது நில அளவீட்டுக்கல் (சர்வே கல்) என்று மற்றொரு தரப்பினரும் தகவல்களை பரப்பி வருகின்றனர். தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை 1981-ல் வெளியிட்ட ‘திருப்பரங்குனறம்’ எனும் நூலில், மலை உச்சியில் உள்ளது கார்த்திகை தீபத்தூண் என குறிப்பிட்டுள்ளது.
இந்நூலின் 129-வது பக்கத்தில், “மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் சென்றால் பாதி வழியில் தீபத்தூண் ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தத் தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு, முகத்தை இடது பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும் சிற்பமும் உள்ளது.
இந்த தீபத்தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும், இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் என்றும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது” என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல் துறையே கார்த்திகை தீபத்தூண் என குறிப்பிட்டுள்ள நிலையில் நேற்று தமிழக அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் யதீஷ்குமார் தலைமையில், உதவி இயக்குநர் லோகநாதன் மற்றும் தொல்லியல் அலுவலர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
காலை 8 மணியிலிருந்து பகல் 12 மணி வரை தீபத் தூணின் முழு பகுதியை ஆய்வு செய்து, அதில் உள்ள விவரங்களை நகல் எடுத்தனர். எனினும், இந்த ஆய்வு தொடர்பான எந்த தகவலையும் தொல்லியல் துறையினர் வெளியிடவில்லை.