

சென்னை: நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதான உணவுப் பயிர் மற்றும் வருமான ஆதாரமாக நெல் விவசாயம் உள்ளது. எனவே, நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்தக் கூடாது என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை தமிழகம் போன்ற மாநிலங்கள் நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது வேதனைக்குரியது.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதான உணவுப் பயிர் மற்றும் வருமான ஆதாரமாக நெல் விவசாயம் உள்ளது. இந்த நிலையில், ஊக்கத் தொகையை நிறுத்துமாறு கூறுவது விவசாயிகளின் உழைப்பை துச்சமாக மதிக்கும் செயலாகும்.
வேளாண் சட்டங்கள்: மத்திய பாஜக அரசு 3 கறுப்பு வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்த்தது.
விவசாயிகளுக்கான மின்சாரத்தை தடை செய்ய உதய் மின் சட்டம், மரபணு மாற்று விதைச் சட்டம் போன்ற விவசாய விரோதச் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது விவசாயிகளின் வருவாயை 2 மடங்கு பெருக்குவேன் என்ற வாக்குறுதி காற்றோடு போய்விட்டது.
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையையும் ஏற்க மாட்டோம். இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதேபோல, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் ஊக்கத் தொகைகளை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, அவர்களுக்கு உறுதுணையாக நிற்பதே அரசின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.