

சென்னை: தமிழகத்தில் 2025-ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 1,476 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தமிழக மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் தமிழக அரசு சார்பில் ‘மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம்’ உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு வந்தது. பின்னர் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டது. தற்போது உடல் உறுப்பு தானம் திட்டத்தை அந்த ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனால், தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உடல் உறுப்புகள் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், மூளைச்சாவு அடைந்தபின் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை மற்றும் குடும்பத்தினர் கவுரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 2025-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்தவர்களில், 266 பேர் உடல் உறுப்புகளை தானம் அளித்துள்ளனர்.
மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசின் நடவடிக்கையால் உடல் உறுப்புகள் தானம் அளிப்போர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும், 1,500 பேர் வரை பயன்பெறுகின்றனர்.
கடந்தாண்டு விபத்தில் சிக்கி, 186 பேரும், விபத்தில்லாத வகையில் 80 பேரும் என மொத்தம் 266 பேர் மூளைச்சாவு அடைந்தனர். அவர்களில் 211 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள். இவர்களில் 154 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 112 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் இருந்தபோது மூளைச்சாவு அடைந்தபின், அவர்களது உறவினர் உடல் உறுப்புகளை தானம் அளித்தனர்.
உடல் உறுப்புகளை தானத்தால் 1,476 பேர் பயன்பெற்றனர். சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றை தானமாக அளிக்க பலர் முன்வந்தாலும், வெளி உறுப்புகளை தானமாக அளிக்க மக்களிடையே தயக்கம் இருக்கிறது. கைகள் தானமாகப் பெறப்பட்டாலும், அந்த உடலுக்கு செயற்கை கைகள் பொருத்தப்படும்.
இதனால் இறந்தவரின் உடல் கைகள் இல்லாமல் இருக்கும் என்ற தயக்கம் வேண்டாம். அவர்கள் தானமாக அளித்த கைகள் மற்றவர்களுக்கு வாழ்வு அளிக்கும். வெளி உறுப்புகள் தானம் அளிப்பதில், மக்களிடையே உளவியல் ரீதியான சிக்கல் இருப்பதால், அதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.