

சென்னை: போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளரை அடுத்து ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது அவர் பிடிபட்டார்.
திருமங்கலம் போலீஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கடந்த 19-ம் தேதி திருமங்கலம் பார்க் ரோடு பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரன் (26) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் எல்எஸ்டி எனும் ஸ்டாம்பு வடிவிலான போதைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்பாளர் முகமது மஸ்தான் சர்புதீன் (44), முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன் (25), வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.27.91 லட்சம், ஓஜி எனப்படும் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கொடுத்த தகவலின்பேரில் சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ் (39) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகவும், இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாகவும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பழைய வண்ணாரப்பேட்டை, நானியப்பன் கார்டன் பகுதியைச் சேர்ந்த அமர் (30) என்பவர் போலீஸார் தேடுவதை அறிந்து வெளிநாட்டுக்கு தப்பினார். ஆடை வடிவமைப்பாளரான இவரை கைது செய்யும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை விமான நிலைய அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் திருமங்கலம் போலீஸாரை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர்.
இதையடுத்து அமரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐபோன் உட்பட 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.