

பாரிவேந்தர் | கோப்புப் படம்
வரும் சட்டப்பேரவை தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்காக இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) திருக்கோவிலூர், அரியலூர், குன்னம் உள்ளிட்ட 7 தொகுதிகளை தயார்படுத்தி வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக, 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியை ஐஜேகே தீவிரப்படுத்தி வருகிறது. இம்முறை, ஐஜேகே களமிறங்குவதற்காக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் உள்ளிட்ட 7 தொகுதிகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இது குறித்து, அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் வட்டத்தில் நம்மிடம் பேசியவர்கள், “நாங்கள் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மாவட்டத் தலைவர் என்ற அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் மாவட்டத் தலைவர்களை நியமித்து உள்ளோம்.
இவர்கள், தங்களுக்கு அடுத்த நிலையிலான நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். இதுவரை 40 தொகுதிகளுக்கான கிளைப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சில தொகுதிகளில் பூத்கமிட்டி வரைக்கும் அமைக்கப்பட்டு கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி, முதல் கூட்டத்தை திருக்கோவிலூரில் நடத்தினோம். இம்முறை அங்கே ஐஜேகே போட்டியிடும். அதேசமயம், அனைத்துத் தொகுதிகளிலும் ஐஜேகே-வுக்கு கட்டமைப்பு இருக்கிறது என்பதை கூட்டணித் தலைமைக்கு நிரூபித்துக் காட்டினால் தான், நாங்கள் கேட்கும் தொகுதிகளைப் பெற முடியும்.
இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்காக அரியலூர், லால்குடி, குன்னம், விருதாச்சலம், திருக்கோவிலூர், திருவாடானை, செங்கல்பட்டு ஆகிய 7 தொகுதிகளை தேர்வு செய்து வைத்திருக் கிறோம். இன்னும் எங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கை இறுதியாகவில்லை என்றாலும் இந்த ஏழு தொகுதிகளுக்குள் தான் நாங்கள் போட்டியிடுவோம்” என்றனர்.