“திமுகவை நம்பினால் நடுரோடு...” - கூட்டணி அணுகுமுறையை தாக்கிய இபிஎஸ்

சென்னை - மயிலாப்பூர் பிரச்சாரத்தில் பேச்சு
“திமுகவை நம்பினால் நடுரோடு...” - கூட்டணி அணுகுமுறையை தாக்கிய  இபிஎஸ்
Updated on
2 min read

சென்னை: “திமுக கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளனர். திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. திமுகவிடம் ஆட்சியை புகழ்ந்து பாட கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த அந்தஸ்து கொடுக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை மயிலாப்பூர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர், “நான் ஏற்கெனவே 193 தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தோம். அது மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலாக மயிலாப்பூரில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் அருளால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வென்று, அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

திமுகவின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது. நமது கூட்டணிக் கட்சிகளை மூன்று நாட்களுக்கு முன்பு நமது கட்சி அலுவலகத்திற்கு அழைத்தோம். அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை அறிவித்தோம். அடுத்த நாள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். நம் தேர்தல் அறிக்கை மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் அனைத்து மக்களும் நமக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

அதேபோல் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த தொகுதியில் எந்தெந்தக் கட்சி போட்டியிடும் என்று பேசி முடிவெடுத்து இன்று அறிவித்துவிட்டோம். அதுமட்டுமல்ல, அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருக்கிறோம். இதை முதன்முதலில் அறிவித்தது அதிமுக தான். 23 வேட்பாளர் அடங்கிய பட்டியலை அறிவித்தோம், இன்னும் ஓரிரு நாட்களில் மீதமும் அறிவிக்கப்படும்.

ஆனால், திமுகவின் நிலை என்ன? திமுக கூட்டணி அமைப்பதற்கு 20 நாட்களாகப் போராடினார்கள். ஒவ்வொரு கட்சியும் பதறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் போராடியே தொகுதி பெறும் அவல நிலை உள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணித் தலைவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

திமுகவில் 10 ஆண்டு காலம் பயணிக்கிறோம் என்கிறார்கள். அதாவது, 10 ஆண்டுகள் அடிமையாக இருக்கிறார்கள். அதனால்தான் 2021 தேர்தலை விட குறைவான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதை திமுக கூட்டணிக் கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது திமுகவிடம் ஆட்சி இருக்கும்போது, அவர்களை புகழ்ந்து பாட உங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் தேர்தலில் உங்களுக்குத் தகுந்த அந்தஸ்து கொடுக்காத கட்சி திமுக.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடிப் பார்த்தார்கள், நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிப்பார்த்தார்கள். ஆனால் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதி பெற்றுள்ளனர். விசிகவும் எவ்வளவோ போராடி 8 இடங்களை மட்டுமே பெற்றனர். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிகம் இடம், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது.

5 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்? துன்பம்தான் மிஞ்சியது. திமுக என்றால் குடும்பக் கட்சி, வாரிசு அரசியல். எம்ஜிஆர் தீயசக்தி திமுகவை அழிக்க அதிமுகவை தோற்றுவித்தார். எம்ஜிஆர் ஆட்சியில் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவந்து ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றனர். ஜெயலலிதா ஆட்சியும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அந்த இருவர் பாதையில் தான் அதிமுக பயணிக்கிறது.

ஸ்டாலின் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா என்று நான்கு அதிகார மையங்கள் உள்ளன. இந்த நான்கு அதிகார மையத்துக்கும் முடிவுகட்டும் தேர்தல் வரக்கூடிய தேர்தல். 2021ல் திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. ஆனால் ஸ்டாலினும் அமைச்சர்களும் எப்போது பார்த்தாலும் 98% நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கிறார்கள்.

திமுக அரசு இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதலிடம். கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டார்கள். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

2021-ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடிதான். கொரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். ஆனால், திமுகவுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. திமுக அரசுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி வருவாய் வந்தது. ஒருபக்கம் வருவாய், இன்னொரு பக்கம் திட்டம் இல்லை, ஆனால் கடன் வாங்குகின்றனர், இதற்கு காரணம் ஊழல். 5 லட்சம் கோடி கடன் வாங்கினால், எப்படி மக்களால் திருப்பிக் கட்ட முடியும்? கடன் வாங்கும் அரசு தொடர வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“திமுகவை நம்பினால் நடுரோடு...” - கூட்டணி அணுகுமுறையை தாக்கிய  இபிஎஸ்
வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in