

கோவையில் நடந்த தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் | படம்: ஜெ.மனோகரன்
கோவை: ‘எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வாக்குகள் திருடப்பட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "கோவை புறநகரில் புதன்கிழமை கேப்டன் ரத யாத்திரை நடைபெற உள்ளது. ‘எஸ்ஐஆர்’ பணிச் சுமையால் உயிரிழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பணிச்சுமை உள்ளது என்றால் மத்திய அரசு அதை கவனத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ‘எஸ்ஐஆர்’ முறையாக நடக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வாக்குகள் திருடப்பட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்.
ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழகம், தமிழக மக்களின் நலன் கருதி தான் கூட்டணி அமையும்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் இதுவரை தமிழக அரசியலில் நாம் கண்டிராத தேர்தலாக அமையும். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோவை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.