‘தர்மேந்திரா... இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம்!’ - பிரதமர் மோடி புகழஞ்சலி

‘தர்மேந்திரா... இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம்!’ - பிரதமர் மோடி புகழஞ்சலி
Updated on
1 min read

புதுடெல்லி: பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தர்மேந்திரா ‘இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு’ என்று அவர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், "தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் தனித்த அடையாளம் கொண்ட திரைப்பட ஆளுமை. அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வசீகரத்தையும், ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு தனித்துவமான நடிகர்.

அவர் மாறுபட்ட வேடங்களில் நடித்த விதம் எண்ணற்ற மக்களை நெகிழவைத்தது. தர்மேந்திரா தனது எளிமை, பணிவு மற்றும் அரவணைப்புக்காகவும் போற்றப்பட்டார். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் உள்ளன" என்று தெரிவித்தார்.

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத் துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வந்தவர். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987-ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது.

இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தர்மேந்திரா கடைசியாக 2023-இல், கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்தார்.

‘தர்மேந்திரா... இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம்!’ - பிரதமர் மோடி புகழஞ்சலி
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்: ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in