

கோவை: “2024 தேர்தலில் சென்னையில் பிரதமர் ரோடுஷோ நடத்தினார். திமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவர் வந்தால் நம்முடைய 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு உறுதியாகிவிடும்” என கோவை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப்.2) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார மேடைக்கு வருவதற்கு முன்னர், சின்னியம்பாளையத்திலிருந்து பிரச்சார மேடை வரை திறந்தவேனில் நின்றவாறு முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ நடத்தினார்.
அதைத் தொடர்ந்து பிரச்சார மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் பேசியது: “2021-ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை. என்னுடைய ஊர் என்று சொல்லும் அளவுக்கு, நான் கோவையுடன் ஒன்றிப் போய் உள்ளேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை கோவை மக்கள் தந்தீர்கள். அது 2026 தேர்தலிலும் முழு வெற்றியாக தொடர வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில், 5 ஆண்டு காலத்தில் மேற்கு மண்டலத்துக்கும், கோவைக்கும் பல்வேறு சாதனைகள், திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். அந்த உரிமையில் உங்களிடம் முழு வெற்றியை கொடுங்கள் எனக் கேட்கிறேன். கோவையில் திராவிட மாடல் ஆட்சியின் இந்த சாதனைகள் தொடர்ந்திட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும். 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டு உங்கள் முன்பு வந்துள்ளேன்.
இவ்வாறு நான் கூறியதை போல், அதிமுக ஆட்சியில் பழனிசாமி செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா? 10 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2016 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக, இந்த லட்சணத்தில் அதிமுகவை பார்த்து தேர்தல் அறிக்கையை காப்பியடித்ததாக பழனிசாமி கூறுகிறார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் என பழனிசாமி நம் திட்டங்களை ஒன்று விடாமல் காப்பி அடித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூற அவர்களிடம் எதுவும் இல்லை. இதில், பழனிசாமியை விட அவரது ஓனர் பிரதமர் மோடிக்கும் இன்னும் கஷ்டம் அதிகமாக உள்ளது. அவரால் தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்புத் திட்டம் எனு எதையும் கூற முடியாது.
வெளிநாட்டில் வாழும் பிரதமர் மோடி, தேர்தல் சீசனில் மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். வரும் 4-ம் தேதி சென்னையில் ரோடு ஷோ பிரதமர் நடத்த உள்ளதாக அறிகிறேன் மகிழ்ச்சி. 2024 தேர்தலில் சென்னையில் பிரதமர் ரோடுஷோ நடத்தினார். திமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவர் வந்தால் நம்முடைய 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு உறுதியாகிவிடும்.
தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழி, மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்கின்றனர். வந்தாரை வாழ வைக்கும் நம்மைப் பார்த்து அபாண்டமாக பழி போட்டவர் பிரதமர் மோடி. குடியரசு தின விழாவில் நம் அலங்கார ஊர்திக்கு இடமில்லை என மறுத்தனர். இதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் மீது வெறுப்பு ஊறிப்போய் உள்ள குணம் அவர்களுக்கு.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த அரசு தான் பாஜக அரசு. 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என காரணம் தெரிவிக்கின்றனர். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த 2 நகரங்களும் தமிழ்நாட்டில் இருப்பது தான் காரணம். தமிழ்நாட்டை பார்த்தால் பாஜகவுக்கு எப்படித் தெரிகிறது. பாஜகவுக்கு வாக்களிக்காததது என்ன பாவச் செயலா? கோவையை கைப்பற்ற பாஜக துடிக்கிறேதே. கோவைக்கு அநீதியை இழைத்துவிட்டு எந்த முகத்தோடு நீங்கள் கோவைக்கு வருகின்றீர்கள்.
மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதி தரும் போது தமிழ்நாட்டை மறந்து விடுவர். தேர்தல் வந்தால் இவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். இப்படியெல்லாம் நீங்கள் தமிழ்நாட்டை பழிவாங்குகிறதால் தான், எங்கள் மக்களும் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது பாஜக நினைவுக்கு வராது. இனியும் வரக்கூடாது. நீங்கள் என்ன திட்டம் போட்டு எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், எங்கள் மக்களுக்கான திட்டத்தை நான் தொடர்ந்து கொடுப்போம். திராவிட மாடல் சாதனைகளை நாங்கள் தொடர்ந்து வெற்றியாக படைத்துக் கொண்டே இருப்போம்” என்று அவர் பேசினார்.