

சென்னை: பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை நடப்பு நிதியாண்டில் 3,778 பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்), வந்தே பாரத் ரயில் வகைகள் தயாரிப்பில் தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகின்றன.
இதுவரை இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ள நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது.
அந்த வகையில், பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 6 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன. இதுதவிர, 2 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் சொந்தமாக தயாரிக்கப்படவுள்ளன. இந்த வகை ரயில் தயாரிப்பதற்காக சுமார் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் நடப்பு நிதியாண்டில் 3,778 பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் 3,778 பெட்டிகள் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 2,270 நவீன எல்எச்பி பெட்டிகள், 8 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், 14 அம்ரித் பாரத் ரயில்கள், ஒரு சரக்கு மின்சார ரயில் உள்ளிட்டவை அடங்கும். தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தவிர, மற்ற ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.