

ராஜபாளையம் ரமணா பள்ளியில் ‘தூக்கம் ஒரு வரம்’ புத்தகத்தை ஐஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டார். அருகில் நூல் ஆசிரியர் கு.கணேசன், பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அசிஸ்டென்ட் எடிட்டர் வி.தேவதாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.
ராஜபாளையம்: “மனிதர்கள் எதிர்கொள்ளும் பல உடல் பிரச்சினைகளுக்குத் தூக்கம் மூலம் தீர்வு காண முடியும்” என்று ஐஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன் குறிப்பிட்டார்.
‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் டாக்டர் கு.கணேசன் எழுதிய, ‘தூக்கம் ஒரு வரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ராஜபாளையம் ரமணா பள்ளியில் நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் எஸ்.சுதா வரவேற்றார். பள்ளித் தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில், அறிவியல் அறிவைப் பரப்புவது அவசியம். அறிவியல் மனப்பான்மை கொண்ட குடிமக்களை உருவாக்குவது அடிப்படை கடமைகளில் ஒன்று என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் மருத்துவ அறிவியலை மிக எளிய மொழி நடையில் மக்களிடம் பரப்பும் நோக்கில், டாக்டர் கு. கணேசன் ஏராளமான கட்டுரைகளையும் நூல்களையும் தமிழில் எழுதி வருகிறார். அந்த வரிசையில் ‘தூக்கம் ஒரு வரம்’ என்ற இந்த நூல் மிக முக்கியமானது.
தூக்கத்தின் மகத்துவம் குறித்த உலகின் சிறந்த பல மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடிப்படையில் இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். மருத்துவ உலகின் தலைசிறந்த 5 கண்டுபிடிப்புகளை விட சிறந்த மருந்து தூக்கம்.
படிக்கும் நேரத்தை விட தூங்கும் நேரம் முக்கியமானது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு மனிதனும் புத்துணர்வு பெறவும், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கவும், குறிப்பாக, மிக ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் தூக்கம் எவ்வளவு பெரிய வரம் என்பதை இந்நூலில் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
உடலின் பல பிரச்சினைகளுக்குத் திருப்தியான தூக்கம் மூலம் தீர்வு காண்பதற்கான வழிகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் த.அறம் பேசுகையில், “பெண்கள் பிறந்தது முதல் பல ஹார்மோன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
அத்தகைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நிறைவான தூக்கம் மூலம் தீர்வு காணலாம். அவற்றை பற்றி இந்நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சாமானியர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் பலருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்” என்றார்.
விழாவில் பேசிய எழுத்தாளர் கண்மணி ராசா, “எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதை விட எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம் என்பதுதான் முக்கியம். அது பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது” என்றார்.
நூலாசிரியர் டாக்டர் கு.கணேசன் தனது ஏற்புரையில், “இதுவரை 64 புத்தகங்கள் எழுதியுள்ளேன். நான் மருத்துவம் படிக்கும் போது தூக்கம் பற்றி 6 பக்கங்கள்தான் இருந்தன.
எனது 40 ஆண்டு கால அனுபவங்கள் மற்றும் பல புத்தகங்களைத் தேடிப் படித்ததன் மூலம், நம் மக்களுக்கு ஏற்ற மொழிநடையில் ‘தூக்கம் ஒரு வரம்’ என்ற இந்த நூலை எழுதி உள்ளேன். இது அனைவருக்கும் தேவையான ஒரு புத்தகம்” என்றார்.
விழாவில் பள்ளி ஆசிரியர் அ.தனலட்சுமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் அசிஸ்டென்ட் எடிட்டர் வி.தேவதாசன் உள்ளிட்டோர் பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அ.சுதா, நிர்வாக அதிகாரி செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் செய்தனர்.