“வேறொரு மொழியை திணித்தால் ஒருபோதும் ஏற்க மாட்டேன்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி

எந்த மொழியையும் விரும்பிப் படிப்பவன் தமிழன்
“வேறொரு மொழியை திணித்தால் ஒருபோதும் ஏற்க மாட்டேன்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி
Updated on
1 min read

சென்னை: தமிழன் எந்த மொழியை​யும் எதிர்க்​க​வில்​லை. மாறாக, விரும்பிப் படிக்​கிறான். அதே​நேரம், வேறொரு மொழியை என் மீது திணித்​தால் அதை ஒரு​போதும் ஏற்​க​மாட்​டேன் என்று உயர் நீதி​மன்ற நீதிபதி என.ஆனந்த் வெங்​கடேஷ் தெரி​வித்​தார்.

சீர்​மிகுசட்​டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்​றம், ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் 3-வது தேசிய குற்​ற​வியல் விசா​ரணை வழக்​குரை போட்டி சென்​னை​ டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக் கழகத்​தில் நடந்​தது. இதன் நிறைவு விழா​வில் நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் பேசி​யது:

மனிதனின் ஆகச்​சிறந்த கண்டுபிடிப்​பு​களில் முதல் இடத்தில் இருப்பது மொழி. உலகில் 6,000 மொழிகள் பேசப்​பட்​டாலும் கிரேக்​கம், லத்​தீன், ஹீப்​ரு, சம்​ஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளே 2,000 ஆண்டுகளைக் கடந்​தவை. அதி​லும், சம்​ஸ்​கிருதம் உள்​ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்​கில் இல்லை. ஆனால் 3,500 ஆண்​டு​களைத் தாண்டி நிற்​கும் ஒரே மொழி தமிழ் என்​பது கீழடி அகழாய்​வில் நிரூபணம் ஆகி​உள்​ளது.

எந்த அரசனையோ, இறைவனையோ, மதத்​தையோ உயர்த் திப் பிடிக்​காத திருக்​குறளில், ஒவ்​வொரு அறக்​கூற்​றை​யும் நுட்​ப​மாக சொல்ல முடிந்​தது என்​றால் 2,000 ஆண்​டு முந்​தைய தமிழனின் வளர்ச்​சியை எண்​ணிப்பார்க்க வேண்​டும்.

சமீபத்​தில் வெளி​யான ‘பராசக்​தி’ படத்தை மகனுடன் சென்று பார்த்​தேன். ‘தமிழகத்​தில் மொழிப் போராட்​டம் நடந்​தது தெரி​யு​மா’ என்று கேட்​டதற்​கு, அவன் தெரி​யாது என்​றான். அதை சொல்​லித்தராமல் கடமை​யில் இருந்து தவறியதற்கு வேதனை அடைந்​தேன், மொழிப் போராட்டம் பற்றி அனை​வரும் கட்​டா​யம் தெரிந்திருக்க வேண்​டும்.

பாடத்​திட்டத்தில் வேறு மொழிகள் ஆக்​கிரமிக்கத் தொடங்​கியதால், மாணவர்​களிடம் தமிழ் மீதான தாக்​கம் குறை​கிறது. தமிழன் எந்த மொழியை​யும் எதிர்க்​க​வில்​லை. மாறாக, விரும்பிப் படிக்​கிறான். என் தமிழ் மொழியின் தொன்​மை, செருக்கு காரணமாக, மற்​றவர்​கள் ஒரு மொழியை என் மீது திணித்​தால் ஒரு​போதும் அதை ஏற்​க​மாட்​டேன். மொழிக்கு இழுக்கு வரும்​போது, உங்​கள் குரல் உயர வேண்டும். தமிழ் மொழியைப் பேசுவதும், பாது​காப்​பதும், அதன் அருமையை தூக்​கிப் பிடிப்​பதும் நம் கடமை. இவ்​வாறு பேசி​னார்.

விழா​வில், உயர் நீதி​மன்ற நீதிபதி சுந்​தர் மோகன், முன்​னாள் நீதிபதி வி.​பார​தி​தாசன், ராகேஷ் சட்ட அறக்​கட்​டளைத் தலை​வர் என்​.ஆர்​.இளங்கோ, மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பால், மாதிரி வழக்​காடு மன்​றத்​தின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் வே.​பாலாஜி, பல்​கலைக்​கழக பதி​வாளர் கவுரி ரமேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

“வேறொரு மொழியை திணித்தால் ஒருபோதும் ஏற்க மாட்டேன்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி
6 மாவட்டங்களில் பிப்.5 வரை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in