

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முயல்வதாகக் கூறப்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியனை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அதன் மாநில செயலாளர் வீரபாண்டியனைச் சந்தித்து உரையாடினார். இடதுசாரிகளை கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் முயல்வதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எனினும் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை குறிப்பாக, அதன் மாநில செயலாளர் வீரபாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். மகிழ்ச்சி. நன்றி” என்று சுருக்கமாகப் பேசிவிட்டு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், “காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்துக்கு வருகை புரிந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். ப.சிதம்பரத்துடன் பழகிய மோகன் குமாரமங்கலம், ஏ.எம்.கோபு, தா.பாண்டியன், கே.டி.கே. தங்கமணி, வி.பி.சிந்தன் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் குறித்து நாங்கள் உரையாடினோம். தேர்தல் முடிவுகள், மக்கள் அளித்த தீர்ப்பு குறித்தும் நாங்கள் பொதுவாக பேசினோம்” என தெரிவித்தார்.
இடதுசாரி கட்சிகளை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முயல்கிறதா என்ற கேள்விக்கு, “அவ்வாறெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கூட்டணியில் சேராது. அதுபோன்று நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். அந்தச் சூழல் வரும்போது கமிட்டி மூலமாகத்தான் நாங்கள் முடிவுகளை எடுப்போம். இப்போது நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்தான் இருக்கிறோம். அந்த கூட்டணியில் இருந்து கொண்டுதான் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
எதிர்வரும் தேர்தல்கள் பற்றிய முடிவு என்பது நாளை (எதிர்காலத்தில்) சிந்திப்போம். இப்போது தவெக நல்லாட்சி தர வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அவர்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.
அதேநேரத்தில் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக காவல் துறையை முடுக்கிவிட வேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு பல கோணங்களில் செயல்பட வேண்டும். நிமிடம்தோறும் விழிப்பாக இருக்க வேண்டும்.
பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்களை தடுப்பதற்கு அரசுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தாலும், தமிழ்ச் சமூகமே ஒன்றுகூடி நின்று போராட முன்வர வேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களும்தான் பெண்களுக்கு அரண். அத்தகைய அரண் வளர வேண்டும்; உயர வேண்டும்” என தெரிவித்தார்.
இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக முடிவெடுத்துள்ளது பற்றி கேள்விக்கு, “அது திமுகவின் கருத்து. நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். தேசிய அளவில் அதில் தலைவர்கள் பங்கேற்பார்கள்” என வீரபாண்டியன் கூறினார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தலுக்குப் பிறகு நன்றி கூட சொல்லாமல் தவெகவுக்கு ஆதரவாக சென்றுவிட்டார்கள் என்ற விமர்சனம் உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், “இந்த விஷயத்தில் நான் ஆழமாக செல்ல விரும்பவில்லை. ஆனால், சொல்லிவிட்டுத்தான் சென்றோம். அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், எனக்குத் தெரியும் தகவல் சொல்லிவிட்டு, மறு தேர்தலை சந்திக்க கட்சி தயாராக இல்லை, தமிழ்நாடு மக்களும் தயாராக இல்லை. இது சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் நிலைப்பாடுதான். எங்கள் நிலைப்பாடும் மற்ற தோழமைக் கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். அவர்கள் இரண்டு நாள் கழித்து முடிவெடுத்தார்கள். நாங்கள் மறுநாளே முடிவெடுத்தோம். இதைத்தான் வேறபாடாக சொல்ல முடியே ஒழிய, நிலைப்பாட்டில் மாறுதல் கிடையாது” என தெரிவித்தார்.