

ஜான்பாண்டியன்
திருநெல்வேலி: ஜெம் வீரமணி விவகாரத்துக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யை பரப்புகிறார்கள் என்று, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, சாந்தி என்ற பெண் உட்பட மொத்தம் 4 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜான்பாண்டியன் கூறியதாவது: வீரமணி சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தொழிலதிபர் என்ற முறையிலேயே வீரமணியை எனக்கு தெரியும். இந்த வழக்கில் யூடியூபர்கள் பலர் தேவையின்றி எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கருத்துகளை பரப்புகிறார்கள்.
காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார், ஒரு பிரபல அரசியல் தலைவர் மூலமாக என்னை வந்து சந்தித்தார். குடும்ப பிரச்சினை எனக்கூறி, சாந்தி என்ற பெண்ணை, ஒருநாள் சென்னை தாஜ் ஓட்டலுக்கு அழைத்து வந்தார். குடும்ப பிரச்சினை என்றும், வீரமணியிடம் பணம் நிறைய இருப்பதாகவும், ரூ. 20 கோடியை அவரிடம் வாங்கி கொடுங்கள் என்றும், இவர்கள் இருவரும் தெரிவித்தனர். அதற்கு நான் உடன்படவில்லை.
அத்தோடு அவர்களுடனான சந்திப்பு முடிந்துவிட்டது. தற்போது எனது பெயரை ஏன் இழுக்கிறார்கள் என தெரியவில்லை. நான் மிரட்டினேன் என கூறும் ரஞ்சன் குமார், அப்போதே காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை? ரஞ்சன் குமாரும், சாந்தியும்தான் பணம் பறிக்க நினைத்தவர்கள்.
எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சைபர் கிரைம் போலீஸிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். போலீஸார் உரிய நடவ டிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கடும் குற்றச் செயல். அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே, ஜான் பாண்டியன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலை தளங்களில் அவதுாறு பரப்புபவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.