ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் சாந்தி, அவரது கணவரை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன்

சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன்

Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கி்ல் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை 3 நாட்கள் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் ஜெம் கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்த கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவுப் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.29-க்கு தள்ளி வைத்தார்.

முன்னதாக இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையும் நீதிபதி எஸ்.பத்மா முன்னிலையில் நேற்று மாலை நடந்தது. இதற்காக சாந்தியும், மகேந்திர சிம்கனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.அனிதா, ‘‘ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்கனிடம் இன்னும் விரிவாக விசாரணை நடத்தவேண்டியுள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் எத்தனை சிறுமிகள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு ஆண்டுகளாக இந்த குற்றங்கள் நடந்தது. வேறு யார்,யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே இருவரையும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், தினமும் ஒரு முறை அவர்களது வழக்கறிஞர் சந்திக்கவும், விசாரணைக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் தங்கள் காவலில் அழைத்துச் சென்றனர்.

<div class="paragraphs"><p>சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன்</p></div>
போலீஸ் அதிகாரிகள் அருண், கண்ணனுக்கு நெருக்கடி: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in