

புது டெல்லி: “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியது: “மகளிர் மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளால் இம்மசோதா தடுத்து நிறுத்தப்பட்டது.
மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற வாரிசு கட்சிகள் கொண்டாடினர். 21-ஆம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும் நாட்டுப் பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக எதிர்காலத்தில் அனுபவிக்கும். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். மகளிரின் கவுரவத்தை எதிர்க்கட்சிகள் காயப்படுத்தியுள்ளது; இந்த அவமானத்தை பெண்கள் மறக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு பெண்மணியின் மனதிலும் இந்த அவமானம் நிரந்தரமாக குடியிருக்கும். காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்த்தேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே கூறிவந்தன.
நாங்கள் வடக்கு, தெற்கு என பிரித்து பார்த்தது இல்லை. மகளிர் சக்தியை உதாசீனம் செய்து எதிர்க்கட்சியினர் பாவம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சியினர் செய்த பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்றார் மோடி.
முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா மீதான விவாதம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று காலை விவாதம் தொடர்ந்தது. அதன்பின் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும். ஆனால் 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது.
நேற்றைய வாக்கெடுப்பின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அது தோல்வி அடைந்ததால், மற்ற 2 மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.