பழநி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு: 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு

தலைமையாசிரியர், பணியாளர்களிடம் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை
சத்துணவு பணியாளரிடம் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள்.

சத்துணவு பணியாளரிடம் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள்.

Updated on: 
1 min read

பழநி: பழநி அருகே மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கிடந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ள மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்.5-ம் தேதி மீண்டும் பள்ளி திறந்தபோது, அங்குள்ள குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் போல் ஏதோ கிடப்பதை பார்த்த பணியாளர்கள், இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உடனே அவர் பணியாளர்களை வைத்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தார்.

2 நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாணவர்களின் பெற்றோர், கிராமத்தினருக்கு தெரியவந்தது. அருவருக்கத்தக்க இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாக கூறி, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை மீண்டும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக வந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், மாணவர்களின் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காலை உணவுத் திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவை கல்வித் துறை அதிகாரிகள் சாப்பிட்டதுடன், மாணவர்களுக்கு விநியோகிக்கும் குடிநீரையும் குடித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து, காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், பள்ளி வளாகம், சமையல் கூடத்தை ஆய்வு செய்து, பள்ளி தலைமையாசிரியர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: இந்த சம்பவத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் மீது கீரனூர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு, பெற்றோர் போராடும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியையும் அப்புறப்படுத்தினர்.

இருப்பினும், பள்ளி மாணவர்களின் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>சத்துணவு பணியாளரிடம் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள். </p></div>
கொடைக்கானலில் 50 சென்ட் நிலத்தின் விற்பனை பத்திரம்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in