

கடலூர் அருகே சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிடக்கோரி, சொத்திக்குப்பம் கடற்கரையிலிருந்து நஞ்சலிங்கம் பேட்டை கடற்கரை பகுதி வரை பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து, கடலூர் சுற்று வட்டார கிராம மக்கள் கடற்கரையில். 2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கடலூர் சிப்காட் விரிவாக்க திட்டமாக புதிய தொழிற்பூங்கா அமைக்க கடந்த 2025-ம் ஆண்டு ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலங்களை கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அப்போதே பொதுமக்கள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக நிலம் கையகப்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழித்து விளங்கும் நிலையில் சிப்காட் விரிவாக்கம் தேவையற்றது;
ஏற்கெனவே கடந்த 1980 களில் சிப்காட் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கே முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை; மேலும் கையகப்படுபத்தப்பட்ட நிலங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சிப்காட் விரிவாக்க திட்டத்தை முற்றிலுமாக கைவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டம், மதியம் 12.30 மணியளவில் போராட்டம் முடிவு பெற்றது. சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.