

மதுரை: திருப்பரங்குன்றம் முழு மலையையும் அளவீடு செய்ய முடியாது என உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தேன்.
இதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.மதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் வாதிடுகையில், முழு மலையையும் அளவிட முடியாது.
மனுதாரர் கோரிக்கையும், நீதிமன்ற உத்தரவும் வெவ்வேறாக உள்ளன. எனவே உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தோம். உச்ச நீதிமன்றம் சம்மபந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரனம் தேடிக்கொள்ள உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், கோயிலை பாதுகாக்கத் தான் உத்தரவிட்டுள்ளோம். இந்த வழக்கு கோயில், தர்கா, தொல்லியல் துறை சம்பந்தப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத் துறைக்கு என்ன வேலை? வேண்டும் என்றால் நீங்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்து ஆஜராகலாம். அதற்கு அனுமதி வழங்கி விசாரணை செப்.25-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.