

சென்னை: பழநி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, கோயில் சொத்துகளின் பயன்பாட்டு விவரங்களைத் துல்லியமாகத் தொகுக்கவும், நிலங்களை மீட்டெடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு புதிய ஆய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக்குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது.
இந்த குழு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என முழுமையாக அறிக்கை தயார் செய்து வழங்கும்.
தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இக்குழுவுக்கு திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் தலைவராகவும், கோயில் இணை ஆணையர், பழநி வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் துணை ஆட்சியர், உதவி இயக்குநர் (நில அளவை), தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.
அறுபடை வீடுகளுக்கும் குழு அமைக்க முடிவு
பழநி கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் முக்கிய முன்னெடுப்பாக இது அமையும். அறுபடை வீடுகளுக்கும் இதேபோல் குழு அமைத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.