

சென்னை: தமிழகத்தில் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையை தனித் துறையாக உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் இத்துறை, ‘சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற கூட்டுத் துறையின்கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்தது. புதிய ஆட்சி அமைந்ததும், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் கீழ் அறநிலையத்துறை இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நிர்வாக வசதிக்காகவும், பணிகளை துரிதப்படுத்தவும், இது தனித் துறையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக தலைமைச் செயலர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலராக உள்ள வி. ராஜாராமனிடம் கூடுதல் பொறுப்பாக அறநிலையத்துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய துறை உருவாக்கத்துக்கு ஏற்ப, ‘தமிழ்நாடு அரசு வணிக விதிகள் 1978’-ல் உரிய மாற்றங்கள் விரைவில் செய்யப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மனிதவள மேலாண்மைத் துறை மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.