

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது, எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் திமுக ஆட்சி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் கடந்த அக்.12-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார். பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை பள்ளத்திவயல், கருவேப்பிலான் கேட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இங்கு மகத்தான தொன்மையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியாததற்கு உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். பவித்ர பூமியான தமிழகத்தில், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், மகா வித்வான்கள் வாழ்ந்த, சோழர்கள் சாம்ராஜ்யம் நடத்திய புதுக்கோட்டையில் சிவன், உமையவளுக்கு தலைவணங்குகிறேன். மண்ணின் மைந்தன் ஜே.சி.குமரப்பாவுக்கு நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் அணிவகுத்து, பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தில், இந்த நிறைவு பயணம் வாயிலாக நாம் பங்கு பெறுவோம் என இந்த மாபெரும் அவையின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். தமிழகத்தில் 2026 ஏப்ரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும். பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போகிறோம்.
எப்பாடுபட்டாவது, எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் திமுக ஆட்சி தான். திமுக கடந்ததேர்தலின்போது தெரிவித்த வாக்குறுதி களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மு.க.ஸ்டாலினின் ஒரே நோக்கம், தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது மட்டும் தான்.
தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி என திட்டம் போடும் ஸ்டாலின் கனவு நிறைவேறாது. இந்த முறை 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் அமையப் போகிறது. அதிமுக- பாஜக கூட்டணி இயற்கையான வெற்றிக் கூட்டணி. 1998, 2019, 2021 தேர்தல்களில் இணைந்தே களம் கண்டோம். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்தனியாக தேர்தலை சந்தித்தோம் என்றாலும், இருகட்சிகளின் மொத்த வாக்குகளை கணக்கிட்டால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழகத்துக்கு எதிரானது என ஸ்டாலின் பொய் பரப்புரை செய்கிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என அறிவித்தது மோடி அரசு தான். ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு, வாராணசியில் தமிழுக்கு இருக்கை, 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஃபிஜி தீவுகளில் தமிழை கற்பிக்க, கற்றுக்கொள்ள வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததும் பாஜக ஆட்சியில் தான். தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி பதவியில் அமர வைத்து அழகு பார்த்ததும் மோடி தலைமையிலான அரசு தான்.
திமுக அரசு ஊழலுக்கான எடுத்துக்காட்டாக, அடையாளமாக மாறிவிட்டது. ஒரு அமைச்சர் சிறைச்சாலை சென்ற பிறகும் 248 நாட்கள் வரை அமைச்சராக தொடர்ந்தார். ஒரு அமைச்சர் வேலைக்கு பணம் வாங்கி ஊழலில் சிக்கியிருக்கிறார். கருப்புப் பணத்தை சலவை செய்யும் வேலையில் ஒருவரது பெயர் அடிபடுகிறது. மணல் அள்ளும் ஊழலில் ஒருவரது பெயர் உள்ளது. நிலக்கரி ஊழலில் ஒருவரது பெயர் உள்ளது. இத்தனை ஊழல்கள் நிறைந்த அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை வைத்துக் கொண்டு தமிழகம் வளர்ச்சி காண முடியுமா?
தமிழகத்தில் எந்த வேலைக்கும் 20 சதவீதம் கட்டிங், கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் தெருவில் இறங்கி போராடும் அவலம் நிலவுகிறது. போராடுபவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயிகளைக்கூட விட்டுவைக்கவில்லை.
இந்த திமுக அரசு, மற்ற மாநில நச்சுக்கழிவுகளை புண்ணிய நதிகள் மூலம் கலக்கவிட்டு குப்பைக் கிடங்கு போல மாற்றிஉள்ளது. இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக அரசு செயல்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில்பூமி பூஜையின் போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடுகின்றனர். இந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அரசியல் சட்ட மாண்பை குறைத்து, இந்துக்கள் சமய உரிமைகளை ஸ்டாலின் பறித்துள்ளார்.
2004- 2014 காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.1.53 லட்சம் கோடி மட்டுமே கிடைத்தது. ஆனால் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-ல் முதல் முறையாக ஒடிஷாவில் பாஜக அரசும், ஆந்திராவில் தே.ஜ கூட்டணி அரசும் அமைந்தது. 2025-ல் ஹரியானாவிலும், 3-வது முறையாக பாஜகவும், மகாராஷ்டிராவில் 3-வது முறை பாஜக கூட்டணியும் ஆட்சியை பிடித்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தது. 2025-ல் பிஹாரில் இண்டியா கூட்டணி மண்ணைக் கவ்வியது. அதேபோல, 2026-ல் தமிழகம், மேற்கு வங்கத்தில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.