

வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மஹால்.
வேலூர்: தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் அவ்வப்போது தப்பி ஓடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் தேனி கிளை சிறையில் இருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதேபோன்று, கடந்த 1995-ம் ஆண்டு வேலூர் கோட்டையில் உயர் பாதுகாப்பு மிகுந்த திப்பு மஹாலில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தினர் 43 பேர் சுமார் 153 அடி நீளம் சுரங்கம் தோண்டி கும்பலாக தப்பிய சம்பவம் இந்தியளவில் இன்றளவும் பேசும் பொருளாக இருந்து வருவதுடன், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தப்பிய 43 பேர்: கடந்த 14-8-1995-ல் சென்னை மாம்பலம் மற்றும் எழும்பூரில் நள்ளிரவு ரோந்து காவல் துறையினரிடம் சிக்கிய இலங்கை தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டனர். மாம்பலத்தில் சிக்கிய ஒருவர் திடீரென சயனைடை விழுங்கி உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மஹாலில் இருந்து தப்பிய விவரம் தெரியவந்தது.
இந்த தகவல் தமிழக காவல் துறைக்கு பேரிடியாக இருந்தது. உடனடியாக, திப்பு மஹாலில் 15-08-1995-ல் நடத்திய சோதனையில் 43 பேர் கும்பலாக சுரங்கம் தோண்டி தப்பியது தெரியவந்தது.
சிதிலமடைந்த கண்காணிப்பு கோபுரம்.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் திப்பு மஹால் பாதுகாப்பு அதிகாரியான டிஎஸ்பி தாசன் அளித்த புகாரின்பேரில் Cr.No: 889/95 U/S 224, 225B, 109 IPC 3(2) (G) of the foreigners act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
பாதுகாப்பில் கோட்டை விட்டதாக கூறி அப்போதைய வேலூர் மாவட்ட எஸ்.பி., அசுதோஷ் சுக்லா, டிஎஸ்பி தாசன் உட்பட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் 22 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் இதுவரை சிக்காத நிலையில், அவர்கள் மீதான வழக்கு மட்டும் வேலூர் நீதிமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அந்த வழக்கு கிடப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது.
153 அடி நீளம் சுரங்கம்: 1993-ம் ஆண்டில் திப்பு மஹாலின் தரை தளத்தின் ஒரு பகுதி அறையில் இருந்த விடுதலை புலிகள் அங்கிருந்து சுரங்கம் தோண்டி தப்பிக்க திட்டம் தீட்டி முயற்சித்துள்ளனர். இதை காவல் துறையினர் கண்டுபிடித்ததும் அவர்கள் வேறுபகுதி அறைகளுக்கு மாற்றப்பட்டனர். சுரங்கம் தோண்ட முயற்சி நடந்த அறையும், அதற்கு அருகில் இருந்த அறைகள் என மொத்தம் 3 அறைகளையும் காவல் துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இந்த பூட்டிய அறைகளை குறிவைத்தே குணசீலன் என்பவரது தலைமையில் சுரங்கம் தோண்டி தப்பும் சதித்திட்டம் நடந்துள்ளது. திப்பு மஹாலில் காவல் துறையினரின் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் முதல் தளத்தில் இருந்த ஒரு அறையின் தரையை தோண்டி துளையிட்டு கீழ் தளத்தில் ஏற்கெனவே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட அறைக்கு சென்றுள்ளனர்.
திப்பு மஹாலில் உள்ள சிறைகளின் அறை.
அந்த அறையில் சுமார் 16 அடி பள்ளம் தோண்டியதுடன், 153 அடி நீளத்துக்கு சுரங்கம் தோண்டியுள்ளனர். அங்கிருந்து கோட்டையின் அகழியின் கருங்கல் சுவர் வரை சென்று மீண்டும் மேல்நோக்கி சுரங்கம் தோண்டியுள்ளனர்.
ஜன்னல் கம்பிகள், சாப்பிடும் தட்டுகளை வளைத்து இரவு, பகலாக 2 ஆண்டுகள் வரை சுரங்கம் தோண்டியுள்ளனர். திப்பு மஹாலில் இருந்து முதற்கட்டமாக தப்பிய சிலர் கடல் வழியாக இலங்கைக்கு தப்பி விடுதலை புலிகள் முகாமுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு சென்றவர்களை தங்களது கட்டளை இல்லாமல் தப்பியது ஏன் என்று விசாரணை நடத்தி சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
உயர் பாதுகாப்பில் அலட்சியம்: திப்பு மஹால், ஹைதர் மஹால் அருகில் உயர் கோபுரம் அமைத்து 25 துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘க்யூ’ பிரிவு காவல் துறையினர் கண்காணிப்பும் இருந்தது. அதையும் மீறி சுரங்கம் தோண்டிய மண்ணை தினந்தோறும் குளியலறைக்கு சிறிது சிறிதாக எடுத்துச் சென்று குளிக்கும் நேரத்தில் தண்ணீரில் கரைத்து வெளியேற்றியுள்ளனர்.
வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு அறைகளாக ‘க்யூ’ பிரிவு காவல் துறையினர் செல்லும்போது முதல் தளத்தின் தரையில் ஓட்டைஇடப்பட்ட பகுதியில் கருங்கல்லை வைத்து சமையல் செய்துள்ளனர். அறைகளுக்குள் சென்று சோதனை நடத்த விடுதலை புலிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல் துறையினர் வெளியில் இருந்தபடியே ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளனர்.
வேலூர் கோட்டையில் திப்பு மஹாலில் இருந்து சுரங்கம் தோண்டி அகழியின் மதிற்சுவர் வழியாக தப்பிய இடம். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
ஒரு சமயம் பாதுகாப்பு அதிகாரியான டிஎஸ்பி தாசன், பொது குளியலறை பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாய் பகுதியில் அடிக்கடி வெவ்வேறு நிறங்களில் தண்ணீர் வெளியேறுவதை கவனித் துள்ளார். ஆனால், அதுகுறித்து ஆய்வு நடத்தாமல் விட்டது பெரும் பிழை என்பதை பின்னாளில் டிஎஸ்பி தாசன் புரிந்து கொண்டார்.
திப்பு மஹாலில் இருந்து 43 பேரும் 12-08-1995-ல் தொடங்கி 14-08-1995 வரை பகுதி, பகுதியாக தப்பியுள்ளனர். இத்தனைக்கும் வேலூர் கோட்டையில்தான் வேலூர் சரக டிஐஜி, எஸ்.பி., அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், உளவுத்துறை அலுவலகங்கள் இயங்கி வந்துள்ளன.
திப்பு மஹால், ஹைதர் மஹால்: விடுதலை புலிகள் (LTTE) மற்றும் EPRLF குழுக்கள் இடையில் மோதல் இருந்து வந்தது. 19-06-1990 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் EPRLF தலைவர் பத்மநாபாவை விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசன், சாந்தன் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் சுட்டு கொன்றனர். இதில், 2 அப்பாவி பொதுமக்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியது. தமிழக அரசுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடியால் தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த விடுதலை புலிகள் இயக்கத்தினர் மற்றும் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதான தேடுதல் வேட்டை தொடங்கியது.
இதில், பிடிபட்ட சுமார் 800 பேரில் குற்ற வழக்குகள் எதுவும் இல்லாத 190-க்கும் மேற்பட்டோர் வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மஹால், ஹைதர் மஹாலில் உயர் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டனர். இதே, திப்பு மஹாலில் இருந்து 1992-ம் ஆண்டு 19 விடுதலை புலிகள் இயக்கத்தினர் தப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.