

மு. வீரபாண்டியன்
கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தத்தின் 62-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தண்டையார் பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜீவானந்தத்தின் சிலைக்கு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் பண்பாட்டு திருவிழாவான ஜல்லிக்கட்டில் சிறந்து விளையாடிய வீரர்களுக்கு அரசு வேலை என்பது நல்லது தான். இந்த விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை.
எந்த மாட்டை அடக்குகிறார்களோ, அந்த மாட்டைதான் கட்டி தழுவுகிறார்கள். முத்தமிடுகிறார்கள். வீட்டில், இல்லத்தில் குடும்ப உறுப்பினரைப் போல மாடுகள் இருக்கின்றன. எனவே இவ்விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிப்பதை வரவேற்கிறோம்.
பல கட்சி இயங்குமுறை கொண்ட ஒரு நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மிக இயல்பு. வாக்குறுதி அளிப்பதும் இயல்பு. அதேநேரம் ஒரு ஜனநாயக வடிவத்தில் அதிமுக இருந்து இந்த வாக்குறுதி அளித்திருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு அருகில் இருக்கிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும். இலவசங்களே கூடாது என்கிறார் பிரதமர் மோடி.
இலவசங்களை ரத்து செய்யவேண்டும் என அழுத்தமாக சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. எனில் சமூக நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜகவுடன் அருகில் நின்று கொண்டு, பழனிசாமி முன்மொழியும் வாக்குறுதிகளை எப்படி நம்ப முடியும்? அதை ஏற்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.