

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். பழனிசாமியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
கடந்த தேர்தலில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தற்போது மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் தருவதாக அவர் அறிவித்துள்ளதில் இருந்தே, திமுக செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொதை திட்டம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்று இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும். இதுவே, திமுக ஆட்சியின் வெற்றிதான்.
அதேசமயம், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதும், வழங்காமல் இருப்பதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முடிவைப் பொறுத்தது. திமுகவின் திட்டத்தை பழனிசாமி காப்பி, பேஸ்ட் செய்துள்ளதால் திமுகவுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் என அக்கட்சியின் தமிழகத் தலைமை அறிவித்துள்ளது.
இதனால், திமுக கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. திமுகவில் கூட்டணி கட்சிகளை அரவணைப்போமே தவிர, அனுப்பி விடமாட்டோம். காங்கிரஸ் எங்களுடன் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அரசியல் தெரியாதவர் டிடிவி. தினகரன். அவர் கூறுவதைப் போன்று வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.